Search This Blog

Saturday, November 13, 2010

நிரந்தர அடிமை

ஒரு நிரந்தர அடிமையாக இருப்பதென்பது 
பேரோவியமென அமைதியாய் அமர்ந்திருக்கும்
இந்த இரவைப் போல
புனிதமானது.

அவன் தனது அடிமைத்தனத்தை 
ஒரு பூங்கொத்தை ஏற்றுக் கொள்வதை போல
புன்னகையுடன் ஏற்றுக் கொண்டான்.
ஒவ்வொரு சாட்டையடியையும் 
ஒரு மழைத்துளியை பெற்றுக் கொள்வதை போல
பரவசத்துடன் பெற்றுக் கொண்டான்.
ஒவ்வொரு வசைச் சொல்லையும் 
அருவியின் சத்தத்தை நிரப்பிக்கொள்வதை போல
தன்னுள் நிரப்பிக் கொண்டான்.
ஏனெனில் 
அவனுக்கு 
முகமூடிகள்
ஒப்பனைகள்
நம்பிக்கைகள்
வரலாற்று  குறிப்புகள்
பயணங்கள்
தத்துவங்கள்
கதைகள்
தேவையற்ற  உரையாடல்கள்
நட்சத்திரங்களை பற்றிய பொய் கனவுகள்
பட்டாம்பூச்சியை பற்றிய வெற்று நினைவுகள்
காலத்தை பற்றிய அபத்த கற்பனைகள்
என எதுவுமே தேவையில்லை.

ஏனெனில் அது 
ஒரு வரம்,
கனவுகளின் பாதாளத்திற்குள் விழுந்திடாமல்
ஒற்றை கயிற்றின் மேல் நடக்கும் 
ஒரு சாகசம்.
ஒரு தவம்.

முடிவற்ற வெளியில் தனித்திருக்கும் 
நட்சத்திரத்தை போல 
அது ஒரு அற்புதம்.

அவன் கண்களை பார்த்ததுண்டா?
அது
சற்றுமுன் இறந்தவனின் நிலை குத்திய கண்களை போல
ஒரு துறவியின்  கண்களை போல,
ஒரு சலனமற்ற நதியில் விழுந்திருக்கும் சூரியனை போல
ஏதுமற்று
எதுவுமே அற்று இருக்கும்.

காலம் வெறுத்து போய் அவனை 
உதைத்து விளையாடும் போதெல்லாம்,
அவன் ஒரு
புத்தனை  போல புன்னகைத்திருப்பான்.

தேவதைகள் அவனை சபிக்கும் போதெல்லாம்
ஆழ்கடலில் தனித்து நடனமாடிக் கொண்டிருக்கும்
மீனின் முகத்தை கொண்டிருப்பான்.

ஏனெனில் பல நேரங்களில் அவன் sisyphus உடன் 
உரையாடிக்கொண்டிருப்பான்.

கண்கள் பிதுங்குமளவு உள்ளிருந்து 
துக்கம் பீறிட்டு வரும் சில பொழுதுகளில் 
பிரபஞ்சமே வெடித்துவிடும் அளவு  
அவன் கதறி அழுகையில் 
பொல பொல வென கொட்டும்  
ஓர் ஆயிரம் நட்சத்திரங்கள்
அவன் கண்களில் இருந்து.
இது போன்ற தருணங்களில் 
அவன் விரல்கள் 
இது போன்ற 
ஒரு கவிதையை
எழுதி கொண்டிருக்கும்.

Tuesday, November 2, 2010

முட்டாள் கேள்வி 3

இந்த ஒற்றை வரி
உனது குரலை
எனது வெடிச்சிரிப்பை
நட்சத்திரத்தை
ஏன் நினைவூட்டுகிறது என்று
நான் எண்ணிக்கொண்டிருக்கையில்,
யாரையாவது அழைத்து பேச வேண்டும்,
அல்லது ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்ப வேண்டுமென
விடாமல் தோன்றிகொண்டிருந்தும்,
நான் என் கைகளை ஏன் விடுவிக்கவேயில்லை?

உன்னிடம் கூறியிருந்தால்
இந்த நொடியை
தலையணை போல தழுவியிருந்திருப்பாயா
சிறு பந்தென உதைத்திருப்பாயா
பொம்மையென கடாசி எறிந்திரிப்பாயா
அல்லது வழக்கம் போல
இயல்பாக சிரிக்க முயற்சித்திருப்பாயா?

இது மோசமான கவிதை
அல்லது
இது ஒரு குப்பை என்று
யார் எனக்கு சொல்லி புரியவைப்பீர்கள்?

எப்போதிருந்து மூச்சுமுட்டுவது எனக்கு ஒரு
போதையாகிப் போனது?


இந்த பின்னிரவு என்னை
வெறித்து நோக்கும் பொழுதில்
என் கைகள்
நடுங்கத்துவங்குகிறது.

இந்த வரிகளை இப்படியே விட்டு விடுவதா
அல்லது
முலாம் பூசி கவிதையாக
விற்று விடுவதா?

முட்டாள் கேள்வி 2

ஒரு உறவை வரையறுப்பதில்
உனக்கு ஏன்
இவ்வளவு பதற்றம்?

ஒழுங்கமைக்கப்பட்ட மேசை
மறுபடியும் மறுபடியும்
ஒழுங்கமைக்கப்படுகிறது.

கச்சிதமாக  உடுத்திய பின்பும்
உடை திரும்பத் திரும்ப
சரி செய்யப்படுகிறது.

முளைத்திருக்கும் பரு
அவசரமாய்
கிள்ளி எறியப்படுகிறது.

முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று
அழுத்தி அழுத்தி
துடைக்கப்படுகிறது.

மீண்டும் மீண்டும் ஏன்
நினைவுபடுத்திக் கொள்கிறாய்
உனது எல்லைகளை?

ஒரு பறவை மேலெழுந்து
பறப்பதை போல
இந்த நதியின் வெள்ளம்
கரை புரள்வதை போல
நின்று கொண்டிருக்கும் இந்த இரவின்
ஆயிரமாயிரம் கிளைகளை போல,

அது எல்லையற்றதாக இருப்பதில்
நீ ஏன்
இவ்வளவு பயம் கொள்கிறாய்?

பட்டாம்பூச்சி பாட்டிலுக்குள் அடைக்கப்படுகிறது.

ஒரு இலை கிள்ளி எறியப்படுகிறது.

பெருமழையின் போது குடை ஒன்று  விரிக்கப்படுகிறது.

கதவுகள் நிரந்தரமாக  மூடப்படுகின்றன.

ஒரு குழந்தை கொலை செய்யப்படுகிறது.  


நீ வரையறுப்பதும்
என் மேல் செலுத்தப்படும்
தீராத வன்முறை என்று
நீ எப்போது புரிந்து கொள்வாய்?.

முட்டாள் கேள்வி 1

அந்தரத்தில் விழுவது
ஒரு மேகம் கலைவதை போல
ஒரு சலனமற்ற நதியில்
மூழ்கிப் போவதை போல
சன்னல் திரையை மெதுவாக
விலக்குவது போல
அமைதியாக இருக்கும் போதினும்,
ஏன்
ஏன் கைகள் தீராமல்
தேடிக்கொண்டிருக்கின்றன
ஒரு கயிற்றை.
அது என்னை நிரந்தரமாக கட்டிப்போடலாமென தெரிந்தும்,
அது தூக்குக்கயிராக  மாறுவதன்
சாத்தியத்தை
உணர்ந்த பின்பும். 

மழைக்கவிதை

மேகம் அப்பிக் கிடக்கும் இந்தக் காலையில்
நனைந்து கொண்டிருக்கும் காக்கையொன்று தன்
அலகால் கொத்தித் தின்கிறது இந்த மழைத்துளியை.

தனியே குடை பிடித்து நடந்து செல்கிறாள்
சிவந்த ஆப்பிளையொத்த சிறுமியொருத்தி
மேகங்களை  மென்று கொண்டு.

எப்பொழுதும் சோர்ந்து போய் துவண்டு கிடக்கும் இந்த
பெயர் தெரியாத மரம்
அள்ளி அள்ளி முகத்தில் தெளிக்கிறது தனது
பச்சையை.

மழை ருசித்து,
என்னை குடித்துக்கொண்டிருக்கிறது
சூடான இந்த கடுங்காப்பி.

எழுத முயலும் ஏன் விரல்களின் நடுவே நழுவி,
 உருண்டோடும்
அத்தனை வார்த்தைகளும்,
தொப்பலாய் நனைந்து
நடனமாடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில்,

சிறிது நேரத்தில் கண்ணாடி சிறையொன்றிற்குள்
அடைபட்டொழியப்போகும்
நான்
எங்கு சென்று தேடுவது
நீ கேட்ட
உனக்கான
மழைக்கவிதையை?

Friday, October 29, 2010

யாசித்தல்

தனியறையில் புகை சூழ படுத்திருக்கும்
எனக்கு
படுக்கையை விட
நின்று கொண்டிருக்கும்
மின்விசிறி
மிக அருகில் இருக்கிறது.
வற்றி விட்ட ஏன் கண்ணீர்
சுரப்பதற்கு
என்
ஆன்மாவிடம்
பிரார்த்திக்கிறேன்.

பிழை

தீராத சோகத்துடன் காலங்காலமாய்
தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்த
எனது பறவையிடம்
ஏன் என்றதற்கு
"இரத்தமற்ற இதயத்தையும்
அர்த்தமற்ற மூளையையும் கொண்டிருக்கும்
எனது சிறகுகளை பிய்த்தெறியும்
உன்னை போன்றவர்களின் கூடாரத்தில் இருக்கையிலே
வசந்தம் வந்து விட்டது என போய் கூவச் சொல்கிறாயா?"
என்றது.

தனியாய் நின்ற எனது நட்சத்திரத்தை
பார்த்து கண்சிமிட்டிய என்னிடம் கேட்டது
"ஆழ் கடலின் கும்மிருட்டில்
நான்
தொலைந்து போக விரும்புகிறேன் 
என்று ஏன் உனக்குப் புரியவில்லை?"
என்று.

தற்கொலை செய்யப்போன ஒரு குட்டி தேவதையை
தடுத்த என்னிடம்
கேட்டது
"நீ அழைத்தவுடன் ஓடி வரும்
என் உயிரை உறிந்து விட்டபின் ஏன்
கன்னத்திலறைந்து உதைத்து விளையாடும்
உன்னைப் போன்றவர்களுடன் அமர்ந்து
பல்லாங்குழி ஆடச் சொல்கிறாயா?"
என்று.

புதிதாய் பிறந்த குழந்தையை பார்த்து
காய்ச்சல் கண்டு விட்ட
மந்திரக் கண் கொண்ட சிறுவனிடம்
ஏன் என்றதற்கு
துப்பினான்
"பெற்றெடுப்பது தான் நீங்கள் செய்யும்
பெரும் பிழை என்று
யுகங்கள் கடந்த பின்பும்
ஏன் உங்களுக்கு புரியவில்லை?"
என்று.

வெயில் குடித்துக் கிறங்கிய கண்களுடன்
பாலைவனத்தின் நடுவில் நிர்வாணமாய்
இனிற கிழவனின்
உடலிலிருந்து வற்றாத சுனை என
குருதி பெருகப் பெருக
தன்னைத் தானே சாட்டையால் அடித்துக்கொண்டிருந்தான்.
ஏன் என்றதற்கு
சீறினான்
"தவறான வரியை திருத்தி எழுத முடியுமானால் சொல்"
என்று.

நிகழும் நொடி


கொட்டித் தீராததொரு பெருங்கோபத்துடன்
தறிகெட்டுத் திரிந்து  கொண்டிருக்கும்' இந்த மழைக்கும்,
கத்தித்தீராததொரு பேரோலத்துடன் பிரபஞ்சத்தை
பிளந்து  கொண்டிருக்கும் இந்த மின்னல் கீற்றுக்கும்
குடித்துத்தீராததொரு பெருந்தாகத்துடன் குளிரை
குடித்துக்கொண்டிருக்கும் இந்த  கரும் இரவிற்கும்
ஆடித்தீராததொரு ஆனந்தத்துடன்
கூத்தாடிக்கொண்டிருக்கும் இந்த ஒற்றை நொடிக்கும்
பூட்டிய கதவிற்குப் பின்னும்
மூடிய போர்வைக்குள்ளும்
சுருண்டு கிடக்கும் என்னிடம்
என்ன இருக்கிறது
திருப்பிக் கொடுப்பதற்கு,
ஒரு கவிதையையும்
என் நிர்வாணத்தையும் தவிர?

Saturday, October 16, 2010

பெயரிடப்படாத கவிதையின் மரணம்

கூண்டிற்குள் இருக்கும் பறவைக்கும்
இரும்பு கதவின் பின் நிற்கும் நாய்க்குட்டிக்கும்
சிறையை பற்றிய கனவு இருக்குமா
விடுபட்டவுடன்?

மரணம் என்ற சொல்லையும்
வாழ்தல் என்ற சொல்லையும்
பரஸ்பரம் அர்த்தம் மாற்றிவிட்டால்
மீண்டும் மரணமடைய உங்களுக்கு
ஆசையிருக்குமா?

என்னுடைய முப்பாட்டன் வைத்த
செங்கலிலா நிற்கிறது இந்த
பாலம்?

எனக்கு ஏன் மூச்சுமுட்டுகிறது
ஒரு குழந்தை சிரிப்பதை
பார்த்தவுடன்?

பொய் சொல்லப்பழகியிராத உன் வாய்
எப்படி நடிக்கதுவங்குகிறது ஒரு
கை நீண்டவுடன்?

ஐந்து வயதில் நான் வாங்கிய
புதிதாய் கறந்து பாலின்
மணம் எனக்கு நினைவிருக்கிறது என்று
அந்த மாடு அறியுமா?

காக்கைகளும், பன்றிகளும், கழுதைகளும்
நம்மை பரிகசிப்பது ஏன் நமக்கு
புரிவதில்லை?

ஆழ்கடலின் இருட்டில் நெடுநேரம் தேடி
அரிய மீன் ஒன்றை கண்டெடுத்தல் போல
உயிரிலிருந்து தோண்டி எடுத்த ஒரு சொல்லை
அவனால் ஏன் உச்சரிக்க முடியவில்லை
உன்னை பார்த்தவுடன்?

சிகரெட்டின் கடைசி புகையில்
ஏன் தோன்றி மறைகிறது
கொற்றவையின் முகம்?

நான் ஏன் இதை இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறேன்?

நீ ஏன் இந்த பெயரிடப்படாத  முட்டாள்தனத்தை  இன்னும் படித்துக்கொண்டிருக்கிறாய்?

இந்த வார்த்தைகள் என்று மரணித்துபோகும்?
நான் இதை எழுதி முடித்தவுடனா?
நீ இதை படித்து முடித்தவுடனா?
அல்லது....

Thursday, October 14, 2010

சிறுமியின் கனவு
கண்ணாடி உறைக்குள் மூச்சுமுட்டி
திணறிக்கொண்டிருக்கிறது அந்த
பொம்மை.
நகரம்

பிச்சைக்காரன் 
வேசி
குருடன் ஊமை செவிடு
பொம்மை
பன்றி இரத்தக்காட்டேரி நரி
நரமாமிசம்
அடிமை
ஹோட்டல் கலிபோர்னியா
காலை
மாலை
நண்பகல்
நள்ளிரவு
பார்த்தும் பார்க்காமலும்
புரிந்தும் புரியாமலும்
உணர்ந்தும் உணராமலும்
இருந்தும் இல்லாமலும்
நிகழும்
கூத்து.

வரலாறு

முதுகெலும்புகளால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த 
குள்ளநரியின் விருந்தாளியாய் வந்திருந்தது 
மண்டையோடுகளை கிரீடமாகக் கொண்ட, குருதி தோய்ந்த
பற்களையுடைய ஓநாய்.
பிணங்களால் ஆன அரங்கில் நடந்துகொண்டிருந்தது
பன்றிகளின் களியாட்டம்.
இரசித்துக்கொண்டிருந்தாள் ஒரு சூனியக்காரி.
வாய் தைக்கப்பட்ட, முதுகெலும்புகள் உருவப்பட்ட
கூட்டமொன்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.
தூரத்தில்
ஒரு நொடி மட்டுமே எழுந்த பாடல் ஒன்று ஊமையானது
ஒரு எழுத்து மட்டுமே எழுதப்பட்டிருந்த கவிதை ஒன்று முடிந்து போனது.
ஆனாலும் 
கண்ணிலிருந்த நரம்பு ஒன்றை உருவி இசைத்துக்கொண்டிருந்தான்
ஒரு இளைஞன் 
பொய்க்கண்ணாடி ஒன்றை உடைப்பதற்கு.
கனவிலிருந்து ஒரு சொல்லை உருவி கவிதை
 எழுதிக்கொண்டிருந்தாள் யுவதி ஒருத்தி
பொய்க்கணக்கு ஒன்றை திருத்தி எழுதுவதற்கு.
உயிரில் இருந்து உருவப்பட்ட மின்னலைக்கொண்டு 
பயிற்சி செய்து கொண்டிருந்தான்  ஒரு போர் வீரன்
மலங்களைத்தின்னும் பேய்களை விரட்டுவதற்கு.
வாய் தைக்கப்பட்ட
கண்கள் பிடுங்கப்பட்ட
கைகள் வெட்டப்பட்ட
கால்கள் ஒடிந்து போன
இரத்தம் வற்றிப்போன 
ஒரு கூட்டத்தின் நடுவே தவழ்ந்து கொண்டிருந்த 
ஒரு சிறுவனின் ஒற்றை கண் 
கனவு கண்டுகொண்டிருந்தது முடிவில்லாமல்
நட்சத்திரம்
பட்டாம்பூச்சி மற்றும்
எழுதப்படாத ஒரு வெள்ளைக்காகிதத்தின் முதல் வரியை பற்றி.

Friday, October 8, 2010

சிறை

அடைக்கப்பட்டிருக்கும் அனைத்து சாளரங்களும்
காத்துக்கொண்டிருக்கின்றன
ஒரு மேகம் கலைவதற்கும்.
ஒற்றை கொக்கி கழல்வதற்கும்
ஒரு கண் திறப்பதற்கும்.
காத்திருத்தல்.
 
முடிவுறாத பாலைவனத்தின் மத்தியில் இருந்த
ஒற்றை சிறையினுள்ளே அடைந்து கிடந்த தனது
மூச்சைத்தின்ற பறவையை எதிர்பார்த்து தனியாய்
காத்துக்கொண்டிருந்தான் ஒரு சிறுவன்.
வெயிலைத் தின்று கொண்டும், குளிரைக் குடித்து கொண்டும்
தீராமல் காத்துக்கொண்டிருந்த அவன்
நிசப்தம் கடித்த ஒரு இரவில் அப்பறவையின் சிறகசைகிறதா
என ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தான்.
அசந்த வேளையில் ஆயிரம் கன்னிகள் நடனமாடிக்கொண்டிருக்க,
நடுவே பாய்ந்து வந்த  புலிக்குட்டியை கண்டு
அரண்டெழுந்த அவன் அரிதாகப் புன்னகைத்தான்.
தன்னை சுற்றி வெறிநாய்கள் நின்று குரைப்பது
போலத்தோன்றும் பல நேரங்களில்
மதயானைப் போல பிளிறிக்கொண்டே அலைந்து திரிந்தான்.
சில நேரங்களில் புத்தனைப் போல அமர்ந்திருந்தான்.
சில நேரங்களில் அவன் பாடிய பொழுது அந்த இசையும்,
பிறந்திராத சில சொற்களும் அழுததுண்டு எதையோ நினைத்து.
சில நேரங்களில் அண்டமே இடிந்து விழுவது போல முடிவில்லாமல்
ஆனந்த நடனமொன்றை ஆடிக்கொண்டிருந்தான்.
சில நேரங்களில் வானம் பார்த்து நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தான்.
அனைத்து நட்சத்திரங்களையும் எண்ணி முடிக்கும் நாளில்
அந்த பறவைக்கு விடுதலை கிடைக்குமென்று காதில் சொல்லியிருந்தது இரவின் ஒரு துளி.
சில நேரங்களில் அவனருகே  மரித்து விழும் நட்சத்திரங்களைப்
பார்த்த பின்   அவனுள்
ஒவ்வொரு நரம்பும் வெடித்துச்சிதறி துண்டு துண்டாய்
போகுமளவு வலி பரவியிருந்தது.
அந்நேரங்களில் தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டு
குமுறிக் குமுறி அழுதிருந்தான்.
அப்பொழுதுகளில் வானம் அவன் தோள்களில் அமர்ந்திருந்தது.
அவனுக்கு மெலிதாய் ஒரு அசைவு  கேட்டது 
சிறகு படபடப்பதைப் போல.  
 
எதற்கு

எனது கனவுகள் என்னை கொன்று புதைத்து கொண்டிருந்தன.
கண்ணெதிரே விபத்தில் தலை நசுங்கிச் செத்துக்கொண்டிருந்தான் ஒருவன்.
'Let it be' என்ற பாடல் எங்கோ ஒலித்துக் கொண்டிருந்தது.
சுருண்டு கிடந்த கயிற்றை பாம்பென நினைத்து பயந்து ஒதுங்கிக்கொண்டிருந்தேன்  நான்.
வங்கக்கடலில் புயலொன்று உருவாகிக்கொண்டு இருந்தது ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்பால்.
கடுங்காப்பி அருந்திக் கொண்டிருந்தேன் நான்.
வெகுநேரம் யோசித்து தயக்கத்துடன் குறுஞ்செய்தி  ஒன்றை அனுப்பிக்கொண்டிருந்தாள்  அவள்.
ஆங்கொரு கிராமத்தில் பட்டினியால் செத்துக்கொண்டிருந்தான் ஒரு விவசாயி.
அலைபேசியை தூக்கி எறிந்ததில் அது இரண்டாகப் பிளந்தபடி இறந்து கிடந்தது.
அடுத்த தெருவில் வன்கலவி ஒன்று நடந்து கொண்டிருந்தது.
எனது கனவுகளை எரிப்பதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள் என் தாய்.
ஓவியன் ஒருவன் இரத்த நிறத்திலான நிலவை படைத்துக்கொண்டிருந்தான்.
குழந்தையொன்று  வாய் விட்டழுதுகொண்டிருந்தது.
என்னை எதிர்பார்த்து ஏமாந்து போன எழுதப்படாத  எனது கவிதை ஒன்று
தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்தது.
ஆடைகளைக் களையத்தொடங்கியிருந்தாள் நடிகை ஒருத்தி.
என்னைக் கொன்ற எனது கனவுகளை காவு வாங்கிக்கொண்டிருந்தன எனது சொற்கள்.
நமதனைவருக்குமான கவிதை ஒன்று எழுதப்பட்டுக்கொண்டிருந்தது.
தீராத பூக்களும் ஓயாமல் தொடுக்கப்பட்டுக்கொண்டிருந்தன.
ஒற்றை சிகரட் புகையினூடே கரையத்தொடங்கியிருந்தது இந்த இரவு.
 

Monday, October 4, 2010

ETERNAL LONELINESS
A garland in dust,
a torn single slipper,
a street dog's endless howl,and
a solitary street lamp's screaming wail.

Saturday, October 2, 2010

தீராத் தனிமை
புழுதியில் புரண்டு கிடக்கும் மாலை
பிய்ந்து போன ஒற்றை செருப்பு
ஒரு தெருநாயின் நீண்ட ஓலம்
ஒற்றை தெருவிளக்கின் வெளிச்சக்கதறல்.
ஊழி
சூன்யத்தின் இறுதி புள்ளியில் அமைந்திருந்தது நட்சத்திரங்களாலான வீடொன்று.
பெரும்பாலான நட்சத்திரங்கள் கருகிவிட்டிருந்த அந்த வீட்டை ஆண்டு கொண்டிருந்தது 
இதயங்கள் ஏதுமற்ற, இரத்த வாடை சுவாசித்து வாழும் பைத்தியக்காரர்களின் கூட்டம்.
அவர்களின் ஆதித் தாய் ஒரு ஓரமாய் காத்துக்கொண்டிருந்தாள்
சதைகளாலும் எலும்புகலாளுமான படுக்கையில்
மரணத்தை எதிர்பார்த்து.
கைகள் கால்கள் கண்கள் இரத்தம் இதயம் மூளை
என அவளின் சகலத்தையும் ஐந்து குடுவைகளில்
அடைத்து வைத்து வயிறார புசித்துக் கொண்டிருந்தார்கள் இவர்கள்.
கண்களை பிய்த்து எடுப்பது இதயத்தை பிழிந்து குடிப்பது என
கொண்டாடிக்கொண்டிருந்த அவர்களுக்கு கனவொன்று இருந்தது.
தீராத இரத்தத்தை பற்றி
அணையாத நெருப்பை பற்றி
மண்டயோடுகளாலான அந்தரத்தில் மிதக்கும் மாளிகையைப் பற்றி மற்றும்
அந்த ஆதித் தாயின் கல்லறையை அலங்கரிப்பது பற்றி.
இவர்கள் மறந்து விட்டிருந்தார்கள் ஆதித்தாயின் கருவறைக்குள்
ஒளிந்திருக்கும் பூக்காரச்சிறுமியை.
அவள் புன்னகைத்தாள் கிழட்டுக் கவிஞனின் இறுதிக்கவிதையில் இருந்த
ஒற்றைச் சொல்லை கண்டவுடன்.

தேடல்

ஆதியில் தோன்றிய மாபெரும் காடு ஒன்றை காத்துக்கொண்டிருக்கிறாள்
பச்சை நிறக் கண்களை உடைய குட்டி வன தேவதை ஒருத்தி.
இவளின் சொற்களைக் குடிக்கும் பட்டாம்பூச்சி ஒன்றையும்
இவளின் கோபம் தின்று வாழும் புலி ஒன்றையும்
வளர்த்து வந்தாள்.
ஒளியிழந்து கொண்டிருந்த நட்சத்திரங்களை களவாடி
ஒரு குடுவையில் பாதுகாத்து வைத்த இவள்
காலத்தை தின்று வாழ்ந்து வந்தாள்.
கனவுகளை தின்று வாழ்ந்தவர்கள் காட்டை வேட்டையாட வந்த போது
இவள் சிரித்த குதூகல சிரிப்பில்
அண்டமனைத்தும் அதிர்ந்து அடங்கியது ஒரு முறை.
திசைகளைப் பிளந்து கொண்டு கால பயத்தில் பதறி ஓடிய அவர்கள்
சிதறிப் போனார்கள் கண்ணீர்த்துளிகளாய்.
ஆனால் அவர்கள் சென்ற போது இவளின் கனவில் இருந்து
ஒற்றை நட்சத்திரத்தையும், ஒற்றை சொல்லையும்  திருடி
சென்று விட்டார்கள்.
பெருங்காட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் அந்த ஒற்றை நட்சத்திரத்தையும் 
ஒற்றை சொல்லையும் தேடியபடியே அலைந்து கொண்டிருக்கிறார்கள் அந்த பட்டாம்பூச்சியும், புலியும்.
காத்திருந்து அலுத்து போன இவள்
காலத்தை சிறிது தெளித்து
மிச்சம் கிடந்த சொற்களையும் கோபத்தையும் வைத்து முடிவுறாத ஒரு இறுதிக் கவிதையை
நெய்து  கொண்டிருக்கிறாள், தொலைத்த நட்சத்திரத்தையும், சொல்லையும் கண்டெடுக்கும் நம்பிக்கையில்.
அந்த கவிதையின் முதல் வரியை நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
 

Friday, September 3, 2010

விடுபடல்.
இறுதி நிமிடத்திர்க்காய் பொறுமையிழந்து
காத்துக் கொண்டிருக்கிறது ஒற்றை
முடிச்சு.
கோமாளிகள்
  ........அதிவேகமாய் நகர்ந்து கொண்டிருந்தது அந்த பேருந்து.
குருடன் ஒருவன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்தான்.
தியானத்தில் மூழ்கியிருந்தான் புத்தனைப் போல இருந்த நடத்துனன்.
பேருந்தின் எந்த இருக்கை தனக்கு சொந்தமென வசை பாடியபடி
சண்டையிட்டுக்கொண்டிருந்தனர் இரு பெரியவர்கள்.
அதை மறைப்பதற்காய் முலைகளை குலுக்கியபடி
நடனமாடிக்கொண்டிருந்தாள் நடிகை ஒருத்தி.
பேருந்தின் வாஸ்து சரியில்லை என புலம்பிக்கொண்டிருந்தான்
சாமியார் ஒருவன்.
வன்கலவியொன்று  நடந்து கொண்டிருந்தது.
கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். சுவாரசியத்துடன் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தது ஒரு கூட்டம்.
பேருந்தின் ஒவ்வொரு பாகத்தின் பத்திரத்தையும்
கூவிக்கூவி விற்றுக்கொண்டிருந்தது சாத்தானின் கூட்டமொன்று.
பட்டினி கிடந்து சாகும் நிலையில் இருந்தவொரு
பைத்தியக்காரன் ஓலமிட்டுக்கொண்டிருந்தான்.
வசந்தம் வரும் காலம் வெகுதூரமில்லை என
புரட்சி  முழக்கமிட்டுக்கொண்டிருந்தான் ஒருவன்.
ஒவ்வொரு நொடியும் ஒரு கொலை நடந்து கொண்டிருந்தது.
குவிந்து கிடக்கும் எலும்புகளின் மேல் ஆனந்த நடனம்
புரிந்து கொண்டிருந்தனர் சாகசக் குள்ளன்கள்.
அதை பார்த்து கும்மாலமிட்டுச் சிரித்துக் கொண்டிருந்ததொரு கூட்டம்.
பதினேழாம் முறையாக சமன்பாடு ஒன்றை
மனனம் செய்து கொண்டிருந்தான் ஒரு சிறுவன்.
தன்னை மறந்து கிதார் வாசித்துக்கொண்டிருந்தான் ஒரு இளைஞன்.
சொர்க்கத்தில் அளவிலா சோமபானம் கிடைக்கும் என்ற
ஒப்பந்தத்தின் படி கடவுளை தொழுது கொண்டிருந்தது ஒரு கூட்டம்.
தீராப்பூக்களைக் கொண்டு ஓயாமல் பூ தொடுத்துக் கொண்டிருந்த சிறுமி
ஒருத்தி மர்மமாய் புன்னகைத்துக்கொண்டிருந்தாள்.
மலைமுகட்டின் விளிம்பில் இருந்து அதிவேகமாய்
நகர்ந்துகொண்டிருந்தது அந்த பேருந்து.......

Friday, August 13, 2010

முகம் பார்த்தல்

முகம் பார்த்தல்.

எங்கள் ஊரில் முகமூடிகளின் கடையொன்று இருக்கிறது.
தேவதையின் முகமூடி,
சாத்தானின் முகமூடி,
கடவுளின் முகமூடி,
நடிகனின் முகமூடி,
முதலாளியின் முகமூடி,
ஆசிரியரின் முகமூடி,
அரசியல்வாதியின் முகமூடி,
வீரனின் முகமூடி,
கவிஞனின் முகமூடி
துறவியின் முகமூடி,
போராளியின் முகமூடி,
அறிவாளியின் முகமூடி,
சமூகசேவகனின்  முகமூடி,
ஓவியனின் முகமூடி
களவாணியின் முகமூடி
என பலவிதங்களில் கிடைக்கும்.
முண்டியடித்துக் கொண்டு முகமூடிகள் வாங்கிச் செல்லும்
கூட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன்.
சிரித்தபடி இருக்கும் முகமூடி ஒன்றை அணிந்து இருந்தவனின் 
முகமூடி நழுவி கீழே விழுந்தது.
பதறியபடி இரத்தக்கறை படிந்த கைகள் நடுங்க
அதை எடுத்து அவசரமாய் முகத்தில் மாட்டிக்கொண்டு ஓடியவனின்
முகமூடியின் மேல் 'தூ.....' வென காறித்  துப்பி விட்ட பின்
இரகசியமாய் ஒளித்து வைத்திருந்த, உடைந்து கொண்டிருந்த,
சிறிய கண்ணாடிச் சில்லில் தனது  முகம் பார்த்து ரசித்துச் சிரித்தான் அந்த சிறுவன்.

Thursday, August 5, 2010

பால்யம்

பால்யம் 
ஊரெங்கும் வெயில் உறுமித்திரிந்து கொண்டிருந்த பொழுது,
திடீரென பெரும் மழையொன்று பெய்த நாளில்,

சாளரங்கள் அனைத்தும் அதிசயமாய் திறந்து கிடந்ததொரு நாளில்,
தரையெங்கும் மேகம் அப்பிக்கிடந்ததொரு நாளில்,
கவிதை எழுதத்தோன்றியது பட்டாம்பூச்சியை பற்றி.
வழியே சென்ற சிறுமியொருத்தி 
என் முகத்தில் துப்பி விட்டுச்சென்றாள் தன புன்னகையை.
கை வைத்து முகம் துடைக்கையில்
விரல்களின் நடுவே வழிந்து கொண்டிருந்ததென் கவிதை,
அவள் சென்ற வழியெங்கும் சிதறிக்கிடந்தது என் பட்டாம்பூச்சியின் சிறகு.

Tuesday, August 3, 2010

குருடர்கள்

குருடர்கள்
"எனது சிறகிரண்டையும் சேர்த்து தைத்த பின்
உங்களுக்கு யார் கற்றுத்தருவது
அதை விரிப்பதற்கும், பறப்பதற்கும்?"
அப்பாவியாய் கேட்டுக்கொண்டிருந்தது,
கணக்கு நோட்டின் கடைசி பக்கத்தில் அவசரம் அவசரமாய்
பிறந்து விட்டிருந்த குட்டிப் பறவையொன்று.

Saturday, June 26, 2010

தானம்
பரதேசி ஒருவன்
ரயில் முழுவதற்குமாய் கொடுக்கிறான்
எனக்கான கையசைப்பை.

Thursday, May 27, 2010

வன்முறை
முகம் தெரியாத நபர்கள் நிறைந்ததொரு நெரிசலான சாலை,
பெற்றோரின் கைபிடித்து நடக்குமொரு குழந்தை, மற்றும்
இரு மின்கம்பிகளுக்குள் சிறைபட்டுக்கிடக்குமொரு
நிலவு.

VIOLENCE
A crowded street filled with strangers,
a child holding the hands of its parents,and
a moon imprisoned between a pair of electric cables.

Tuesday, May 25, 2010

ஒரேயொரு மரணம்

ஒரேயொரு மரணம்

வரம்பில்லா ஆடுகளத்தில்,விதிமுறைகளில்லாத ஆட்டமொன்று
நடந்து கொண்டிருக்கிறது
இரவை மென்று விழுங்கியபடி.
சந்தேகத்தின்  தீராத கண்கள்
பரிகசித்துக்கொண்டிருக்கின்றன
உண்மையின் சடலத்தைப் பார்த்து.
இல்லாத விதிமுறைகளை கற்றுக்கொண்ட
வீரர்கள் உயிரிழந்து கொண்டேயிருக்கின்றார்கள்
நரிகள் வென்று கொண்டேயிருக்கின்றன,
இல்லாத விதிமுறைகளும் மீறப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன
கூட்டத்தில் அடங்க மாட்டாமல் ஆரவாரம் அதிகரிக்கிறது,
நடுவர்கள் முகங்களை மாற்றியபடியே நடனமாடிக் கொண்டிருக்கின்றார்கள்,
தியாகத்தின் எச்சமொன்று முனகிக்கொண்டே இருக்கின்றது
காலத்திடம்,
தீராத இந்த இரவை குடித்துவிடும்படி,
காலம் காத்துக்கொண்டிருக்கிறது,
தனது மரணத்தை வேண்டியபடி.

Tuesday, May 18, 2010

ஈழம்- வரலாற்றுப்பிழை

ஊரெங்கும் படிந்து போயிருக்கிறது துரோகத்தின் சுவடுகள்
தீராதாகம் கொண்ட குரூரத்தின் நாவுகள்
தகித்துக்கொண்டிருக்கின்றன வெயிலை விழுங்கியபடி
மூச்சுக்காற்றின் ஓரமெங்கும் நிறைந்திருக்கின்றன
சந்தேகத்தின் கங்குகள்,
அனைவரின் கைகளிலிருந்தும் இரத்தம் சொட்டிக்கொண்டிருக்கிறது,
தெருவெங்கும் சிதறிக்கிடக்கும் பிணங்களை பார்த்து
புன்னகை செய்கின்றன கழுகுகள்
அமைதி திடுக்கிடுகிறது
ஒரு மூளை வெடித்துச் சிதறும்போதும்
இரண்டாகப்பிளந்த ஒரு இதயம் துடித்து அடங்கும்போதும்
உயிரும் அதன் அடையாளங்களும் குரூரமான பயங்கரங்களை
ஒளித்து வைத்திருக்கின்றன
பயத்தை அடித்தொண்டையில் மறைத்து வைத்து
நகர முயலும் இரவிடமிருந்து எப்படியோ
வெளிப்பட்டு விடுகிறது ஒரு விசும்பல் சத்தம்,
பரவிக்கிடக்கும் சாத்தானின் தோரணங்கள்
ஏளனமாய் சிரிக்கின்றன
வாழ எத்தனிக்கும் முயற்சிகளைப்பார்த்து
நியாயங்கள் திரும்பதிரும்ப களவாடப்படுகிறதொரு
நகரத்தில்
வரலாற்றை போதையின் உச்சத்திலிருக்கும்
குடிகாரக் குரங்கோன்று கிறுக்குவதற்கு
விசேட காரணங்கள் ஏதுமில்லை
உலகில் அனைவரது இதயமும்
துருப்பிடித்துப்போய் சிதிலமடைந்து விட்டன
என்பதைத் தவிர
எப்படியாயினும் நம் அனைவரின் கைகளிலும்
புதியதாய்
நீங்காததொரு இரத்தக்கறை படிந்திருக்கிறது,
நமது நியாயங்களும் தர்க்கங்களும் என்றோ
தோற்று விட்டன,
மற்றும்
நமது வரலாற்றையும் ஏதாவதொரு
குடிகாரக் குரங்கு கிறுக்கத் தொடங்கியிருக்கலாம்

Monday, May 17, 2010

தனிமை

தனிமை
நள்ளிரவில் மாநகரத்தின் மைய வீதியொன்றின்
நடுவே துடித்துக்கொண்டிருக்கிறது ஒற்றை
செருப்பு

இல்லறம்

இல்லறம்

நமுட்டுச் சிரிப்பு சிரிக்கும்
அன்பளிப்பாய் வந்த கடியாரம்
கைமறதியாய் என்றோ தொலைந்து
போன கண்ணாடி
வெகுநாட்களாய் கலைந்து கிடக்கும்
படுக்கையறையின் ஒற்றைப் படுக்கை
புழுதி படிந்து போயிருக்கும் சாளரம்
விடாது அலறும் அலைபேசி
துருப்பிடித்துப் போய்க் கிடக்கும்
கைவிலங்கு மற்றும்
கொலையுண்டு கிடக்கும் இருபிணங்கள்

இருத்தலின் கோபம்

இருத்தலின் கோபம்

பெருங்கோபத்தின் ஓவியமொன்று
வைக்கப்பட்டிருக்கிறது இந்த ஊரின் நடுவில்
அதிலிருந்து சிதறிய ஒரு துளி
தீராத்தாகம் கொண்ட பாலைவனத்தின்
ஒற்றை வேரென ஊடுருவியிருக்கிறது
எனது உயிர் முழுதும்
இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு
அணு மீதும் தீராக்கோபம்
கொண்ட இசைக்கலைஞன் ஒருவன்
கிதார் வாசித்துக்கொண்டிருக்கிறான்
அந்த ஓவியத்தின் முன் நின்று
தன்னைப்பற்றிய
கடுங்கோபத்துடன் கடவுளை
தனது காலடியில் போட்டு
மிதித்துக்கொண்டிருக்கிறான் குடிகாரன் ஒருவன்
இந்தச்சமூகத்தைப் பற்றிய
கடுங்கோபத்துடன் ஆகாயத்தின் மீது
மூத்திரம் பெய்கிறான் இளைஞன் ஒருவன்
பிரபஞ்சத்தின் ஜனனமே தவறானதென
கண்கள் சிவக்கக் கோபம் கொண்டு
மலை மேல் அமர்ந்திருக்கிறாள்
குட்டித்தேவதை ஒருத்தி
நூற்றாண்டுகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும்
கிழட்டுக் கவிஞன் ஒருவன் கடுங்கோபத்துடன்
இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான்
"நீயும் நானும் தகுதியற்றவர்கள்
இந்த உலகத்தின் இருப்பு தகுதியற்றது"

இருத்தலின் தவிப்பு

இருத்தலின் தவிப்பு

காரணங்கள் தொலைந்து போனதொரு நட்சத்திரங்களற்ற இரவில்
எனக்கான அடையாளங்கள் சிதறிய கண்ணாடித்துண்டுகளுக்கிடையில் கிடக்கின்றன
எனது புரிதல்கள் அனைத்தும் தோற்றுப் போய்க்கொண்டிருக்கிற
நொடிச்சிதறலில் தவறி விழுந்த ஓர் கணத்தில்
இருத்தலின் கோபம் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது மதுக்கோப்பைகளின் நுனியில்
வலி பரவிக்கொண்டிருக்கிறது மர்மநரம்பின் வழி முடிவிலியை நோக்கி
குரூரத்தின் தாகம் கொண்ட வேரொன்று ஊடுருவிச் செல்கிறது பயத்தின் கீறல் வழி
யாருமற்ற இருண்ட வெளியில் விழுந்து கொண்டிருக்கிறது நிழல்
ஓலமிட்டபடி உடைந்து சிதறிக்கொண்டிருக்கிறது இரவு
கனவுகளின் செயற்கை சுவாசங்கள் பயனிழந்து கொண்டிருக்கின்றன
எதிரே அமர்ந்து சோம்பல் முறிக்கும் மரணம் பார்த்து அழகாய்ச் சிரிக்கிறது
வெடித்துக் கிளம்புகிறது வெட்கமற்ற அழுகை .
------------------------------------------------------------

A TINY GLOWING POT OF DREAM

A TINY POT OF DREAM

I'm sentenced to death,
My hands are cuffed
my heart is stringed to every pillar in the world,
and I'm imprisoned in a cell,
with an open roof and
an infinite ball of fire underneath,
curious in touching me with its furious lips.
My eyes search for the skies,
and finds solace in the deep blue.
A lonely star winks at me
in this cloudy night.
My lips part for a beautiful smile.
The air is full of pain,
smoke,
burnt skin,
tears,
blood and
angst.
i could feel
the hangman tying the knot,
i could feel my legs
falling off charred,
Still, i smile,
I breathe and
my heart beats,
i dont even believe in miracles,
Or a mad playwright,
I maybe hanged,
buried,
or burnt alive,
my eyes may no longer see,
my heart may no longer beat,
my lips may no longer smile,
but
I will never die,
For
I have hidden my life
in a tiny glowing pot of dream,
hidden in my soul.
Guess, why that lonely star
winked at me?
she saw the pot and the glow,
and she knew it was eternal.
when i knew she saw it
a smile bloomed from my soul
filling the air with hope.
I could hear the foot steps of the hangman nearing me,
And......
I burst into an uncontrolled laughter!!!!

ADIEU

ADIEU

'Goodbye'
I dint know the word could be so cruel.
As i woke up in the morning,
and when i realised i was alone,
It was like a thunder strike me
"oh my god! did you really leave?"
I was lying there with my heart struggling to
Grope with reality.
As i looked around the room,
I saw emptiness,
my room was empty,
my day was empty.
And when i took my pen,
to write this poem,
my hand was trembling.
Words never seemed so absurd to me.
I was walking all alone under the scorching sun
when i found you, My companion.
It was magical,
I instantly put my arms around your shoulder
And i no longer cared about reaching the destination.
The journey was awesome and the destination did not matter.
As i lit up the cigarette this morning,
I dint realize,
You weren't there to finish it,
Nor i knew as i ordered a coffee
i had to stare at the half finished glass waiting for you.
Was this a dream or what?
As i walked along a long road, i saw my shadow,
after a very long time.
For i had you all along
and i forgot i had a shadow of my own.
I learned to smile,
to laugh,
to fight,
to go crazy,
to dream,
to be mad and
to love.
Even as i was falling into abyss,
with nothing to hold and no one to help,
I smiled and giggled at the thrill of falling,
For i had hope,
For i had you.
In the cold desert's winter night,
you were the warmth that kept me alive.
As we part ways,
Those ties that bound us, as they break,
It pains.
And i'm filled with memories.
Wherever you are those memories will connect us.
Our joy,
Our happiness,
Our dreams,
all will remain forever
in my mind,
in the air,
in the space and in that
distant star known only to us.
I struggle to stop my tears,
You never taught me to cry,
and i would never.
And when you come to meet me,
even if my doors are closed,
please barge into it.
I'd be waiting for you.
Sorry dude,
this poem can never be completed,
As i am never complete without you.
Look out of your window,
I've gifted you the star you always wanted to have.
See you soon.
ADIEU!!!
--