Search This Blog

Monday, January 17, 2011

பிம்பம்

மரத்தை பார்க்கும் நதி.
நதியை பார்க்கும் மரம்.
அசைகிறதா இல்லையா
இலை?

Saturday, November 13, 2010

நிரந்தர அடிமை

ஒரு நிரந்தர அடிமையாக இருப்பதென்பது 
பேரோவியமென அமைதியாய் அமர்ந்திருக்கும்
இந்த இரவைப் போல
புனிதமானது.

அவன் தனது அடிமைத்தனத்தை 
ஒரு பூங்கொத்தை ஏற்றுக் கொள்வதை போல
புன்னகையுடன் ஏற்றுக் கொண்டான்.
ஒவ்வொரு சாட்டையடியையும் 
ஒரு மழைத்துளியை பெற்றுக் கொள்வதை போல
பரவசத்துடன் பெற்றுக் கொண்டான்.
ஒவ்வொரு வசைச் சொல்லையும் 
அருவியின் சத்தத்தை நிரப்பிக்கொள்வதை போல
தன்னுள் நிரப்பிக் கொண்டான்.
ஏனெனில் 
அவனுக்கு 
முகமூடிகள்
ஒப்பனைகள்
நம்பிக்கைகள்
வரலாற்று  குறிப்புகள்
பயணங்கள்
தத்துவங்கள்
கதைகள்
தேவையற்ற  உரையாடல்கள்
நட்சத்திரங்களை பற்றிய பொய் கனவுகள்
பட்டாம்பூச்சியை பற்றிய வெற்று நினைவுகள்
காலத்தை பற்றிய அபத்த கற்பனைகள்
என எதுவுமே தேவையில்லை.

ஏனெனில் அது 
ஒரு வரம்,
கனவுகளின் பாதாளத்திற்குள் விழுந்திடாமல்
ஒற்றை கயிற்றின் மேல் நடக்கும் 
ஒரு சாகசம்.
ஒரு தவம்.

முடிவற்ற வெளியில் தனித்திருக்கும் 
நட்சத்திரத்தை போல 
அது ஒரு அற்புதம்.

அவன் கண்களை பார்த்ததுண்டா?
அது
சற்றுமுன் இறந்தவனின் நிலை குத்திய கண்களை போல
ஒரு துறவியின்  கண்களை போல,
ஒரு சலனமற்ற நதியில் விழுந்திருக்கும் சூரியனை போல
ஏதுமற்று
எதுவுமே அற்று இருக்கும்.

காலம் வெறுத்து போய் அவனை 
உதைத்து விளையாடும் போதெல்லாம்,
அவன் ஒரு
புத்தனை  போல புன்னகைத்திருப்பான்.

தேவதைகள் அவனை சபிக்கும் போதெல்லாம்
ஆழ்கடலில் தனித்து நடனமாடிக் கொண்டிருக்கும்
மீனின் முகத்தை கொண்டிருப்பான்.

ஏனெனில் பல நேரங்களில் அவன் sisyphus உடன் 
உரையாடிக்கொண்டிருப்பான்.

கண்கள் பிதுங்குமளவு உள்ளிருந்து 
துக்கம் பீறிட்டு வரும் சில பொழுதுகளில் 
பிரபஞ்சமே வெடித்துவிடும் அளவு  
அவன் கதறி அழுகையில் 
பொல பொல வென கொட்டும்  
ஓர் ஆயிரம் நட்சத்திரங்கள்
அவன் கண்களில் இருந்து.
இது போன்ற தருணங்களில் 
அவன் விரல்கள் 
இது போன்ற 
ஒரு கவிதையை
எழுதி கொண்டிருக்கும்.

Tuesday, November 2, 2010

முட்டாள் கேள்வி 3

இந்த ஒற்றை வரி
உனது குரலை
எனது வெடிச்சிரிப்பை
நட்சத்திரத்தை
ஏன் நினைவூட்டுகிறது என்று
நான் எண்ணிக்கொண்டிருக்கையில்,
யாரையாவது அழைத்து பேச வேண்டும்,
அல்லது ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்ப வேண்டுமென
விடாமல் தோன்றிகொண்டிருந்தும்,
நான் என் கைகளை ஏன் விடுவிக்கவேயில்லை?

உன்னிடம் கூறியிருந்தால்
இந்த நொடியை
தலையணை போல தழுவியிருந்திருப்பாயா
சிறு பந்தென உதைத்திருப்பாயா
பொம்மையென கடாசி எறிந்திரிப்பாயா
அல்லது வழக்கம் போல
இயல்பாக சிரிக்க முயற்சித்திருப்பாயா?

இது மோசமான கவிதை
அல்லது
இது ஒரு குப்பை என்று
யார் எனக்கு சொல்லி புரியவைப்பீர்கள்?

எப்போதிருந்து மூச்சுமுட்டுவது எனக்கு ஒரு
போதையாகிப் போனது?


இந்த பின்னிரவு என்னை
வெறித்து நோக்கும் பொழுதில்
என் கைகள்
நடுங்கத்துவங்குகிறது.

இந்த வரிகளை இப்படியே விட்டு விடுவதா
அல்லது
முலாம் பூசி கவிதையாக
விற்று விடுவதா?

முட்டாள் கேள்வி 2

ஒரு உறவை வரையறுப்பதில்
உனக்கு ஏன்
இவ்வளவு பதற்றம்?

ஒழுங்கமைக்கப்பட்ட மேசை
மறுபடியும் மறுபடியும்
ஒழுங்கமைக்கப்படுகிறது.

கச்சிதமாக  உடுத்திய பின்பும்
உடை திரும்பத் திரும்ப
சரி செய்யப்படுகிறது.

முளைத்திருக்கும் பரு
அவசரமாய்
கிள்ளி எறியப்படுகிறது.

முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று
அழுத்தி அழுத்தி
துடைக்கப்படுகிறது.

மீண்டும் மீண்டும் ஏன்
நினைவுபடுத்திக் கொள்கிறாய்
உனது எல்லைகளை?

ஒரு பறவை மேலெழுந்து
பறப்பதை போல
இந்த நதியின் வெள்ளம்
கரை புரள்வதை போல
நின்று கொண்டிருக்கும் இந்த இரவின்
ஆயிரமாயிரம் கிளைகளை போல,

அது எல்லையற்றதாக இருப்பதில்
நீ ஏன்
இவ்வளவு பயம் கொள்கிறாய்?

பட்டாம்பூச்சி பாட்டிலுக்குள் அடைக்கப்படுகிறது.

ஒரு இலை கிள்ளி எறியப்படுகிறது.

பெருமழையின் போது குடை ஒன்று  விரிக்கப்படுகிறது.

கதவுகள் நிரந்தரமாக  மூடப்படுகின்றன.

ஒரு குழந்தை கொலை செய்யப்படுகிறது.  


நீ வரையறுப்பதும்
என் மேல் செலுத்தப்படும்
தீராத வன்முறை என்று
நீ எப்போது புரிந்து கொள்வாய்?.

முட்டாள் கேள்வி 1

அந்தரத்தில் விழுவது
ஒரு மேகம் கலைவதை போல
ஒரு சலனமற்ற நதியில்
மூழ்கிப் போவதை போல
சன்னல் திரையை மெதுவாக
விலக்குவது போல
அமைதியாக இருக்கும் போதினும்,
ஏன்
ஏன் கைகள் தீராமல்
தேடிக்கொண்டிருக்கின்றன
ஒரு கயிற்றை.
அது என்னை நிரந்தரமாக கட்டிப்போடலாமென தெரிந்தும்,
அது தூக்குக்கயிராக  மாறுவதன்
சாத்தியத்தை
உணர்ந்த பின்பும். 

மழைக்கவிதை

மேகம் அப்பிக் கிடக்கும் இந்தக் காலையில்
நனைந்து கொண்டிருக்கும் காக்கையொன்று தன்
அலகால் கொத்தித் தின்கிறது இந்த மழைத்துளியை.

தனியே குடை பிடித்து நடந்து செல்கிறாள்
சிவந்த ஆப்பிளையொத்த சிறுமியொருத்தி
மேகங்களை  மென்று கொண்டு.

எப்பொழுதும் சோர்ந்து போய் துவண்டு கிடக்கும் இந்த
பெயர் தெரியாத மரம்
அள்ளி அள்ளி முகத்தில் தெளிக்கிறது தனது
பச்சையை.

மழை ருசித்து,
என்னை குடித்துக்கொண்டிருக்கிறது
சூடான இந்த கடுங்காப்பி.

எழுத முயலும் ஏன் விரல்களின் நடுவே நழுவி,
 உருண்டோடும்
அத்தனை வார்த்தைகளும்,
தொப்பலாய் நனைந்து
நடனமாடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில்,

சிறிது நேரத்தில் கண்ணாடி சிறையொன்றிற்குள்
அடைபட்டொழியப்போகும்
நான்
எங்கு சென்று தேடுவது
நீ கேட்ட
உனக்கான
மழைக்கவிதையை?

Friday, October 29, 2010

யாசித்தல்

தனியறையில் புகை சூழ படுத்திருக்கும்
எனக்கு
படுக்கையை விட
நின்று கொண்டிருக்கும்
மின்விசிறி
மிக அருகில் இருக்கிறது.
வற்றி விட்ட ஏன் கண்ணீர்
சுரப்பதற்கு
என்
ஆன்மாவிடம்
பிரார்த்திக்கிறேன்.