Search This Blog

Friday, August 13, 2010

முகம் பார்த்தல்

முகம் பார்த்தல்.

எங்கள் ஊரில் முகமூடிகளின் கடையொன்று இருக்கிறது.
தேவதையின் முகமூடி,
சாத்தானின் முகமூடி,
கடவுளின் முகமூடி,
நடிகனின் முகமூடி,
முதலாளியின் முகமூடி,
ஆசிரியரின் முகமூடி,
அரசியல்வாதியின் முகமூடி,
வீரனின் முகமூடி,
கவிஞனின் முகமூடி
துறவியின் முகமூடி,
போராளியின் முகமூடி,
அறிவாளியின் முகமூடி,
சமூகசேவகனின்  முகமூடி,
ஓவியனின் முகமூடி
களவாணியின் முகமூடி
என பலவிதங்களில் கிடைக்கும்.
முண்டியடித்துக் கொண்டு முகமூடிகள் வாங்கிச் செல்லும்
கூட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன்.
சிரித்தபடி இருக்கும் முகமூடி ஒன்றை அணிந்து இருந்தவனின் 
முகமூடி நழுவி கீழே விழுந்தது.
பதறியபடி இரத்தக்கறை படிந்த கைகள் நடுங்க
அதை எடுத்து அவசரமாய் முகத்தில் மாட்டிக்கொண்டு ஓடியவனின்
முகமூடியின் மேல் 'தூ.....' வென காறித்  துப்பி விட்ட பின்
இரகசியமாய் ஒளித்து வைத்திருந்த, உடைந்து கொண்டிருந்த,
சிறிய கண்ணாடிச் சில்லில் தனது  முகம் பார்த்து ரசித்துச் சிரித்தான் அந்த சிறுவன்.

Thursday, August 5, 2010

பால்யம்

பால்யம் 
ஊரெங்கும் வெயில் உறுமித்திரிந்து கொண்டிருந்த பொழுது,
திடீரென பெரும் மழையொன்று பெய்த நாளில்,

சாளரங்கள் அனைத்தும் அதிசயமாய் திறந்து கிடந்ததொரு நாளில்,
தரையெங்கும் மேகம் அப்பிக்கிடந்ததொரு நாளில்,
கவிதை எழுதத்தோன்றியது பட்டாம்பூச்சியை பற்றி.
வழியே சென்ற சிறுமியொருத்தி 
என் முகத்தில் துப்பி விட்டுச்சென்றாள் தன புன்னகையை.
கை வைத்து முகம் துடைக்கையில்
விரல்களின் நடுவே வழிந்து கொண்டிருந்ததென் கவிதை,
அவள் சென்ற வழியெங்கும் சிதறிக்கிடந்தது என் பட்டாம்பூச்சியின் சிறகு.

Tuesday, August 3, 2010

குருடர்கள்

குருடர்கள்
"எனது சிறகிரண்டையும் சேர்த்து தைத்த பின்
உங்களுக்கு யார் கற்றுத்தருவது
அதை விரிப்பதற்கும், பறப்பதற்கும்?"
அப்பாவியாய் கேட்டுக்கொண்டிருந்தது,
கணக்கு நோட்டின் கடைசி பக்கத்தில் அவசரம் அவசரமாய்
பிறந்து விட்டிருந்த குட்டிப் பறவையொன்று.