Search This Blog

Friday, September 3, 2010

விடுபடல்.
இறுதி நிமிடத்திர்க்காய் பொறுமையிழந்து
காத்துக் கொண்டிருக்கிறது ஒற்றை
முடிச்சு.
கோமாளிகள்
  ........அதிவேகமாய் நகர்ந்து கொண்டிருந்தது அந்த பேருந்து.
குருடன் ஒருவன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்தான்.
தியானத்தில் மூழ்கியிருந்தான் புத்தனைப் போல இருந்த நடத்துனன்.
பேருந்தின் எந்த இருக்கை தனக்கு சொந்தமென வசை பாடியபடி
சண்டையிட்டுக்கொண்டிருந்தனர் இரு பெரியவர்கள்.
அதை மறைப்பதற்காய் முலைகளை குலுக்கியபடி
நடனமாடிக்கொண்டிருந்தாள் நடிகை ஒருத்தி.
பேருந்தின் வாஸ்து சரியில்லை என புலம்பிக்கொண்டிருந்தான்
சாமியார் ஒருவன்.
வன்கலவியொன்று  நடந்து கொண்டிருந்தது.
கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். சுவாரசியத்துடன் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தது ஒரு கூட்டம்.
பேருந்தின் ஒவ்வொரு பாகத்தின் பத்திரத்தையும்
கூவிக்கூவி விற்றுக்கொண்டிருந்தது சாத்தானின் கூட்டமொன்று.
பட்டினி கிடந்து சாகும் நிலையில் இருந்தவொரு
பைத்தியக்காரன் ஓலமிட்டுக்கொண்டிருந்தான்.
வசந்தம் வரும் காலம் வெகுதூரமில்லை என
புரட்சி  முழக்கமிட்டுக்கொண்டிருந்தான் ஒருவன்.
ஒவ்வொரு நொடியும் ஒரு கொலை நடந்து கொண்டிருந்தது.
குவிந்து கிடக்கும் எலும்புகளின் மேல் ஆனந்த நடனம்
புரிந்து கொண்டிருந்தனர் சாகசக் குள்ளன்கள்.
அதை பார்த்து கும்மாலமிட்டுச் சிரித்துக் கொண்டிருந்ததொரு கூட்டம்.
பதினேழாம் முறையாக சமன்பாடு ஒன்றை
மனனம் செய்து கொண்டிருந்தான் ஒரு சிறுவன்.
தன்னை மறந்து கிதார் வாசித்துக்கொண்டிருந்தான் ஒரு இளைஞன்.
சொர்க்கத்தில் அளவிலா சோமபானம் கிடைக்கும் என்ற
ஒப்பந்தத்தின் படி கடவுளை தொழுது கொண்டிருந்தது ஒரு கூட்டம்.
தீராப்பூக்களைக் கொண்டு ஓயாமல் பூ தொடுத்துக் கொண்டிருந்த சிறுமி
ஒருத்தி மர்மமாய் புன்னகைத்துக்கொண்டிருந்தாள்.
மலைமுகட்டின் விளிம்பில் இருந்து அதிவேகமாய்
நகர்ந்துகொண்டிருந்தது அந்த பேருந்து.......