Search This Blog

Friday, October 29, 2010

யாசித்தல்

தனியறையில் புகை சூழ படுத்திருக்கும்
எனக்கு
படுக்கையை விட
நின்று கொண்டிருக்கும்
மின்விசிறி
மிக அருகில் இருக்கிறது.
வற்றி விட்ட ஏன் கண்ணீர்
சுரப்பதற்கு
என்
ஆன்மாவிடம்
பிரார்த்திக்கிறேன்.

பிழை

தீராத சோகத்துடன் காலங்காலமாய்
தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்த
எனது பறவையிடம்
ஏன் என்றதற்கு
"இரத்தமற்ற இதயத்தையும்
அர்த்தமற்ற மூளையையும் கொண்டிருக்கும்
எனது சிறகுகளை பிய்த்தெறியும்
உன்னை போன்றவர்களின் கூடாரத்தில் இருக்கையிலே
வசந்தம் வந்து விட்டது என போய் கூவச் சொல்கிறாயா?"
என்றது.

தனியாய் நின்ற எனது நட்சத்திரத்தை
பார்த்து கண்சிமிட்டிய என்னிடம் கேட்டது
"ஆழ் கடலின் கும்மிருட்டில்
நான்
தொலைந்து போக விரும்புகிறேன் 
என்று ஏன் உனக்குப் புரியவில்லை?"
என்று.

தற்கொலை செய்யப்போன ஒரு குட்டி தேவதையை
தடுத்த என்னிடம்
கேட்டது
"நீ அழைத்தவுடன் ஓடி வரும்
என் உயிரை உறிந்து விட்டபின் ஏன்
கன்னத்திலறைந்து உதைத்து விளையாடும்
உன்னைப் போன்றவர்களுடன் அமர்ந்து
பல்லாங்குழி ஆடச் சொல்கிறாயா?"
என்று.

புதிதாய் பிறந்த குழந்தையை பார்த்து
காய்ச்சல் கண்டு விட்ட
மந்திரக் கண் கொண்ட சிறுவனிடம்
ஏன் என்றதற்கு
துப்பினான்
"பெற்றெடுப்பது தான் நீங்கள் செய்யும்
பெரும் பிழை என்று
யுகங்கள் கடந்த பின்பும்
ஏன் உங்களுக்கு புரியவில்லை?"
என்று.

வெயில் குடித்துக் கிறங்கிய கண்களுடன்
பாலைவனத்தின் நடுவில் நிர்வாணமாய்
இனிற கிழவனின்
உடலிலிருந்து வற்றாத சுனை என
குருதி பெருகப் பெருக
தன்னைத் தானே சாட்டையால் அடித்துக்கொண்டிருந்தான்.
ஏன் என்றதற்கு
சீறினான்
"தவறான வரியை திருத்தி எழுத முடியுமானால் சொல்"
என்று.

நிகழும் நொடி


கொட்டித் தீராததொரு பெருங்கோபத்துடன்
தறிகெட்டுத் திரிந்து  கொண்டிருக்கும்' இந்த மழைக்கும்,
கத்தித்தீராததொரு பேரோலத்துடன் பிரபஞ்சத்தை
பிளந்து  கொண்டிருக்கும் இந்த மின்னல் கீற்றுக்கும்
குடித்துத்தீராததொரு பெருந்தாகத்துடன் குளிரை
குடித்துக்கொண்டிருக்கும் இந்த  கரும் இரவிற்கும்
ஆடித்தீராததொரு ஆனந்தத்துடன்
கூத்தாடிக்கொண்டிருக்கும் இந்த ஒற்றை நொடிக்கும்
பூட்டிய கதவிற்குப் பின்னும்
மூடிய போர்வைக்குள்ளும்
சுருண்டு கிடக்கும் என்னிடம்
என்ன இருக்கிறது
திருப்பிக் கொடுப்பதற்கு,
ஒரு கவிதையையும்
என் நிர்வாணத்தையும் தவிர?

Saturday, October 16, 2010

பெயரிடப்படாத கவிதையின் மரணம்

கூண்டிற்குள் இருக்கும் பறவைக்கும்
இரும்பு கதவின் பின் நிற்கும் நாய்க்குட்டிக்கும்
சிறையை பற்றிய கனவு இருக்குமா
விடுபட்டவுடன்?

மரணம் என்ற சொல்லையும்
வாழ்தல் என்ற சொல்லையும்
பரஸ்பரம் அர்த்தம் மாற்றிவிட்டால்
மீண்டும் மரணமடைய உங்களுக்கு
ஆசையிருக்குமா?

என்னுடைய முப்பாட்டன் வைத்த
செங்கலிலா நிற்கிறது இந்த
பாலம்?

எனக்கு ஏன் மூச்சுமுட்டுகிறது
ஒரு குழந்தை சிரிப்பதை
பார்த்தவுடன்?

பொய் சொல்லப்பழகியிராத உன் வாய்
எப்படி நடிக்கதுவங்குகிறது ஒரு
கை நீண்டவுடன்?

ஐந்து வயதில் நான் வாங்கிய
புதிதாய் கறந்து பாலின்
மணம் எனக்கு நினைவிருக்கிறது என்று
அந்த மாடு அறியுமா?

காக்கைகளும், பன்றிகளும், கழுதைகளும்
நம்மை பரிகசிப்பது ஏன் நமக்கு
புரிவதில்லை?

ஆழ்கடலின் இருட்டில் நெடுநேரம் தேடி
அரிய மீன் ஒன்றை கண்டெடுத்தல் போல
உயிரிலிருந்து தோண்டி எடுத்த ஒரு சொல்லை
அவனால் ஏன் உச்சரிக்க முடியவில்லை
உன்னை பார்த்தவுடன்?

சிகரெட்டின் கடைசி புகையில்
ஏன் தோன்றி மறைகிறது
கொற்றவையின் முகம்?

நான் ஏன் இதை இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறேன்?

நீ ஏன் இந்த பெயரிடப்படாத  முட்டாள்தனத்தை  இன்னும் படித்துக்கொண்டிருக்கிறாய்?

இந்த வார்த்தைகள் என்று மரணித்துபோகும்?
நான் இதை எழுதி முடித்தவுடனா?
நீ இதை படித்து முடித்தவுடனா?
அல்லது....

Thursday, October 14, 2010

சிறுமியின் கனவு
கண்ணாடி உறைக்குள் மூச்சுமுட்டி
திணறிக்கொண்டிருக்கிறது அந்த
பொம்மை.
நகரம்

பிச்சைக்காரன் 
வேசி
குருடன் ஊமை செவிடு
பொம்மை
பன்றி இரத்தக்காட்டேரி நரி
நரமாமிசம்
அடிமை
ஹோட்டல் கலிபோர்னியா
காலை
மாலை
நண்பகல்
நள்ளிரவு
பார்த்தும் பார்க்காமலும்
புரிந்தும் புரியாமலும்
உணர்ந்தும் உணராமலும்
இருந்தும் இல்லாமலும்
நிகழும்
கூத்து.

வரலாறு

முதுகெலும்புகளால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த 
குள்ளநரியின் விருந்தாளியாய் வந்திருந்தது 
மண்டையோடுகளை கிரீடமாகக் கொண்ட, குருதி தோய்ந்த
பற்களையுடைய ஓநாய்.
பிணங்களால் ஆன அரங்கில் நடந்துகொண்டிருந்தது
பன்றிகளின் களியாட்டம்.
இரசித்துக்கொண்டிருந்தாள் ஒரு சூனியக்காரி.
வாய் தைக்கப்பட்ட, முதுகெலும்புகள் உருவப்பட்ட
கூட்டமொன்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.
தூரத்தில்
ஒரு நொடி மட்டுமே எழுந்த பாடல் ஒன்று ஊமையானது
ஒரு எழுத்து மட்டுமே எழுதப்பட்டிருந்த கவிதை ஒன்று முடிந்து போனது.
ஆனாலும் 
கண்ணிலிருந்த நரம்பு ஒன்றை உருவி இசைத்துக்கொண்டிருந்தான்
ஒரு இளைஞன் 
பொய்க்கண்ணாடி ஒன்றை உடைப்பதற்கு.
கனவிலிருந்து ஒரு சொல்லை உருவி கவிதை
 எழுதிக்கொண்டிருந்தாள் யுவதி ஒருத்தி
பொய்க்கணக்கு ஒன்றை திருத்தி எழுதுவதற்கு.
உயிரில் இருந்து உருவப்பட்ட மின்னலைக்கொண்டு 
பயிற்சி செய்து கொண்டிருந்தான்  ஒரு போர் வீரன்
மலங்களைத்தின்னும் பேய்களை விரட்டுவதற்கு.
வாய் தைக்கப்பட்ட
கண்கள் பிடுங்கப்பட்ட
கைகள் வெட்டப்பட்ட
கால்கள் ஒடிந்து போன
இரத்தம் வற்றிப்போன 
ஒரு கூட்டத்தின் நடுவே தவழ்ந்து கொண்டிருந்த 
ஒரு சிறுவனின் ஒற்றை கண் 
கனவு கண்டுகொண்டிருந்தது முடிவில்லாமல்
நட்சத்திரம்
பட்டாம்பூச்சி மற்றும்
எழுதப்படாத ஒரு வெள்ளைக்காகிதத்தின் முதல் வரியை பற்றி.

Friday, October 8, 2010

சிறை

அடைக்கப்பட்டிருக்கும் அனைத்து சாளரங்களும்
காத்துக்கொண்டிருக்கின்றன
ஒரு மேகம் கலைவதற்கும்.
ஒற்றை கொக்கி கழல்வதற்கும்
ஒரு கண் திறப்பதற்கும்.
காத்திருத்தல்.
 
முடிவுறாத பாலைவனத்தின் மத்தியில் இருந்த
ஒற்றை சிறையினுள்ளே அடைந்து கிடந்த தனது
மூச்சைத்தின்ற பறவையை எதிர்பார்த்து தனியாய்
காத்துக்கொண்டிருந்தான் ஒரு சிறுவன்.
வெயிலைத் தின்று கொண்டும், குளிரைக் குடித்து கொண்டும்
தீராமல் காத்துக்கொண்டிருந்த அவன்
நிசப்தம் கடித்த ஒரு இரவில் அப்பறவையின் சிறகசைகிறதா
என ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தான்.
அசந்த வேளையில் ஆயிரம் கன்னிகள் நடனமாடிக்கொண்டிருக்க,
நடுவே பாய்ந்து வந்த  புலிக்குட்டியை கண்டு
அரண்டெழுந்த அவன் அரிதாகப் புன்னகைத்தான்.
தன்னை சுற்றி வெறிநாய்கள் நின்று குரைப்பது
போலத்தோன்றும் பல நேரங்களில்
மதயானைப் போல பிளிறிக்கொண்டே அலைந்து திரிந்தான்.
சில நேரங்களில் புத்தனைப் போல அமர்ந்திருந்தான்.
சில நேரங்களில் அவன் பாடிய பொழுது அந்த இசையும்,
பிறந்திராத சில சொற்களும் அழுததுண்டு எதையோ நினைத்து.
சில நேரங்களில் அண்டமே இடிந்து விழுவது போல முடிவில்லாமல்
ஆனந்த நடனமொன்றை ஆடிக்கொண்டிருந்தான்.
சில நேரங்களில் வானம் பார்த்து நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தான்.
அனைத்து நட்சத்திரங்களையும் எண்ணி முடிக்கும் நாளில்
அந்த பறவைக்கு விடுதலை கிடைக்குமென்று காதில் சொல்லியிருந்தது இரவின் ஒரு துளி.
சில நேரங்களில் அவனருகே  மரித்து விழும் நட்சத்திரங்களைப்
பார்த்த பின்   அவனுள்
ஒவ்வொரு நரம்பும் வெடித்துச்சிதறி துண்டு துண்டாய்
போகுமளவு வலி பரவியிருந்தது.
அந்நேரங்களில் தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டு
குமுறிக் குமுறி அழுதிருந்தான்.
அப்பொழுதுகளில் வானம் அவன் தோள்களில் அமர்ந்திருந்தது.
அவனுக்கு மெலிதாய் ஒரு அசைவு  கேட்டது 
சிறகு படபடப்பதைப் போல.  
 
எதற்கு

எனது கனவுகள் என்னை கொன்று புதைத்து கொண்டிருந்தன.
கண்ணெதிரே விபத்தில் தலை நசுங்கிச் செத்துக்கொண்டிருந்தான் ஒருவன்.
'Let it be' என்ற பாடல் எங்கோ ஒலித்துக் கொண்டிருந்தது.
சுருண்டு கிடந்த கயிற்றை பாம்பென நினைத்து பயந்து ஒதுங்கிக்கொண்டிருந்தேன்  நான்.
வங்கக்கடலில் புயலொன்று உருவாகிக்கொண்டு இருந்தது ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்பால்.
கடுங்காப்பி அருந்திக் கொண்டிருந்தேன் நான்.
வெகுநேரம் யோசித்து தயக்கத்துடன் குறுஞ்செய்தி  ஒன்றை அனுப்பிக்கொண்டிருந்தாள்  அவள்.
ஆங்கொரு கிராமத்தில் பட்டினியால் செத்துக்கொண்டிருந்தான் ஒரு விவசாயி.
அலைபேசியை தூக்கி எறிந்ததில் அது இரண்டாகப் பிளந்தபடி இறந்து கிடந்தது.
அடுத்த தெருவில் வன்கலவி ஒன்று நடந்து கொண்டிருந்தது.
எனது கனவுகளை எரிப்பதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள் என் தாய்.
ஓவியன் ஒருவன் இரத்த நிறத்திலான நிலவை படைத்துக்கொண்டிருந்தான்.
குழந்தையொன்று  வாய் விட்டழுதுகொண்டிருந்தது.
என்னை எதிர்பார்த்து ஏமாந்து போன எழுதப்படாத  எனது கவிதை ஒன்று
தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்தது.
ஆடைகளைக் களையத்தொடங்கியிருந்தாள் நடிகை ஒருத்தி.
என்னைக் கொன்ற எனது கனவுகளை காவு வாங்கிக்கொண்டிருந்தன எனது சொற்கள்.
நமதனைவருக்குமான கவிதை ஒன்று எழுதப்பட்டுக்கொண்டிருந்தது.
தீராத பூக்களும் ஓயாமல் தொடுக்கப்பட்டுக்கொண்டிருந்தன.
ஒற்றை சிகரட் புகையினூடே கரையத்தொடங்கியிருந்தது இந்த இரவு.
 

Monday, October 4, 2010

ETERNAL LONELINESS
A garland in dust,
a torn single slipper,
a street dog's endless howl,and
a solitary street lamp's screaming wail.

Saturday, October 2, 2010

தீராத் தனிமை
புழுதியில் புரண்டு கிடக்கும் மாலை
பிய்ந்து போன ஒற்றை செருப்பு
ஒரு தெருநாயின் நீண்ட ஓலம்
ஒற்றை தெருவிளக்கின் வெளிச்சக்கதறல்.
ஊழி
சூன்யத்தின் இறுதி புள்ளியில் அமைந்திருந்தது நட்சத்திரங்களாலான வீடொன்று.
பெரும்பாலான நட்சத்திரங்கள் கருகிவிட்டிருந்த அந்த வீட்டை ஆண்டு கொண்டிருந்தது 
இதயங்கள் ஏதுமற்ற, இரத்த வாடை சுவாசித்து வாழும் பைத்தியக்காரர்களின் கூட்டம்.
அவர்களின் ஆதித் தாய் ஒரு ஓரமாய் காத்துக்கொண்டிருந்தாள்
சதைகளாலும் எலும்புகலாளுமான படுக்கையில்
மரணத்தை எதிர்பார்த்து.
கைகள் கால்கள் கண்கள் இரத்தம் இதயம் மூளை
என அவளின் சகலத்தையும் ஐந்து குடுவைகளில்
அடைத்து வைத்து வயிறார புசித்துக் கொண்டிருந்தார்கள் இவர்கள்.
கண்களை பிய்த்து எடுப்பது இதயத்தை பிழிந்து குடிப்பது என
கொண்டாடிக்கொண்டிருந்த அவர்களுக்கு கனவொன்று இருந்தது.
தீராத இரத்தத்தை பற்றி
அணையாத நெருப்பை பற்றி
மண்டயோடுகளாலான அந்தரத்தில் மிதக்கும் மாளிகையைப் பற்றி மற்றும்
அந்த ஆதித் தாயின் கல்லறையை அலங்கரிப்பது பற்றி.
இவர்கள் மறந்து விட்டிருந்தார்கள் ஆதித்தாயின் கருவறைக்குள்
ஒளிந்திருக்கும் பூக்காரச்சிறுமியை.
அவள் புன்னகைத்தாள் கிழட்டுக் கவிஞனின் இறுதிக்கவிதையில் இருந்த
ஒற்றைச் சொல்லை கண்டவுடன்.

தேடல்

ஆதியில் தோன்றிய மாபெரும் காடு ஒன்றை காத்துக்கொண்டிருக்கிறாள்
பச்சை நிறக் கண்களை உடைய குட்டி வன தேவதை ஒருத்தி.
இவளின் சொற்களைக் குடிக்கும் பட்டாம்பூச்சி ஒன்றையும்
இவளின் கோபம் தின்று வாழும் புலி ஒன்றையும்
வளர்த்து வந்தாள்.
ஒளியிழந்து கொண்டிருந்த நட்சத்திரங்களை களவாடி
ஒரு குடுவையில் பாதுகாத்து வைத்த இவள்
காலத்தை தின்று வாழ்ந்து வந்தாள்.
கனவுகளை தின்று வாழ்ந்தவர்கள் காட்டை வேட்டையாட வந்த போது
இவள் சிரித்த குதூகல சிரிப்பில்
அண்டமனைத்தும் அதிர்ந்து அடங்கியது ஒரு முறை.
திசைகளைப் பிளந்து கொண்டு கால பயத்தில் பதறி ஓடிய அவர்கள்
சிதறிப் போனார்கள் கண்ணீர்த்துளிகளாய்.
ஆனால் அவர்கள் சென்ற போது இவளின் கனவில் இருந்து
ஒற்றை நட்சத்திரத்தையும், ஒற்றை சொல்லையும்  திருடி
சென்று விட்டார்கள்.
பெருங்காட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் அந்த ஒற்றை நட்சத்திரத்தையும் 
ஒற்றை சொல்லையும் தேடியபடியே அலைந்து கொண்டிருக்கிறார்கள் அந்த பட்டாம்பூச்சியும், புலியும்.
காத்திருந்து அலுத்து போன இவள்
காலத்தை சிறிது தெளித்து
மிச்சம் கிடந்த சொற்களையும் கோபத்தையும் வைத்து முடிவுறாத ஒரு இறுதிக் கவிதையை
நெய்து  கொண்டிருக்கிறாள், தொலைத்த நட்சத்திரத்தையும், சொல்லையும் கண்டெடுக்கும் நம்பிக்கையில்.
அந்த கவிதையின் முதல் வரியை நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.